நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புத்தி கண்டகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திரிசூலி தோபன் பகுதி வரையிலான வெள்ள அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி, உயரமான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 6 ஆயிரம் பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரிடர் ஏற்பட்டு ஏறக்குறைய 40 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை வெளியாகியுள்ளது. நேபாளம் - திபெத் எல்லைக்கு அருகே, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இமயமலைப் பகுதியில் திடீரென பனிப்பாறை உடைந்ததால், போடேகோஷி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
Advertisement
இதன் காரணமாக மத்திய மற்றும் வடக்கு நேபாளப் பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ளத்துடன் அடித்துவரப்பட்ட சேறும் சகதியும் அங்குள்ள உள்கட்டமைப்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தின. இந்தப் பேரிடரில் 1,453 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், உயிரிழந்தவர்களில் 112 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுவரை 13,795 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,113 பேர் 21 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், திபெத் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 43 பேர் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் சீன ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஆற்றில் கருப்பு நிறத்தில் சேறு கலந்த நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆற்றங்கரையோரம் மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கையைப் பின்பற்றி, பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.