பள்ளிக் காலை உணவில் பல்லி! – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
பூந்தமல்லியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்ததாகவும், அதை சாப்பிட்ட 17 மாணவர்கள் வாந்தி உள்ளிட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெறும் விளம்பரத்துக்கானதாகவே இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்உணவு தயாரிக்கப்படும் இடங்களில் முறையான சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.