இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா கடைசியாக நடித்த ‘புலவர்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கிராமிய வாழ்வியலையும், எதார்த்தமான மனிதர்களின் உணர்வுகளையும் தனது தனித்துவமான பாணியில் படமாக்கி புகழ்பெற்றவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இயக்குநராகப் பல வெற்றிப் படங்களை வழங்கியதுடன், நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். கடந்த ஜூன் 10-ம் தேதி பாரதிராஜா காலமானது தமிழ் திரையுலகினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது படைப்புகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் கடைசியாக நடித்த திரைப்படம் தற்போது வெளியாகத் தயாராகியுள்ளது. முருகையா எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘புலவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
படத்திற்கு அஜ்மல் கான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் வெளியிட்டார். தொடர்ந்து, செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம், பின்னர் குறிப்பிட்ட தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘புலவர்’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரும் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் பாரதிராஜாவை மீண்டும் திரையில் காண முடிவதால், இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான பாரதிராஜாவின் கடைசிப் படமாகக் கருதப்படும் ‘புலவர்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.