உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (அக். 22) பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே, வங்கக்கடலில் நாளை (அக். 23) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வலுப்பெற்று புயலாக மாறுவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 15.4 செ.மீ. மழை பதிவு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும் பெய்துள்ளது. சென்னையின் எம்.ஜி.ஆர். நகரில் அதிகபட்சமாக 15.4 செ.மீ. மழை பதிவானது.
அக்டோபர் 26 வரை மழை நீடிக்கும் தமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி வரை பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் ஏற்கெனவே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம். அது வலுப்பெற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகரக்கூடும். இந்த அமைப்பு புயலாக மாறுவதற்கும் சாதகமான சூழல் நிலவுகிறது. இருப்பினும், அந்தப் புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதுகுறித்த கூடுதல் அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 17 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். காரைக்காலிலும் இதேபோன்ற மழைக்கு வாய்ப்புள்ளது. திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கனமழை பெய்யலாம். தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளையும் பல மாவட்டங்களில் கனமழை வெள்ளிக்கிழமையான நாளை (அக். 23), கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். மழையின் தீவிரத்தைப் பொறுத்து, மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
புயலாக மாறினால் ‘முரசு’ எனப் பெயரிடப்படும் வங்கக்கடலில் நாளை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால், அதற்கு ‘முரசு’ எனப் பெயரிடப்படும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் நடைமுறைக்காக இந்தியா பரிந்துரைத்த பெயர்களில் இதுவும் ஒன்று. இதற்கிடையே, அரபிக்கடலில் ஏற்கெனவே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சோமாலியா கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் சென்றுள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்யக்கூடும் என்றும், இந்த ஆண்டின் பருவமழை ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.