அந்தமான் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக உருவாகும் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாநிலத்தின் மேலும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (23.10.2026) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார்.