Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

‘புதுப் பானையில் பழைய சோறு' - தமிழக பட்ஜெட்டை விமர்சித்த எஸ்டிபிஐ

‘புதுப் பானையில் பழைய சோறு' - தமிழக பட்ஜெட்டை விமர்சித்த எஸ்டிபிஐ
தமிழக அரசின் 2026–2027 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், "புதுப் பானையில் பழைய சோறு" போன்றதாகவே அமைந்துள்ளது என்றும் எஸ்டிபிஐ கட்சி விமர்சித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புதிய அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்ததாகவும், ஆனால் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்தமாக ஏமாற்றமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகளை எஸ்டிபிஐ வரவேற்றுள்ளது. புதுமணத் தம்பதிகளில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் படுக்கை வசதிகளுடன் ‘TN சுடர்’ ஒருங்கிணைந்த நவீன மாணவர் விடுதிகள் அமைக்கும் திட்டம், ரூ.50 கோடி செலவில் 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் உருவாக்கும் திட்டம் மற்றும் பொதுமக்களுக்கான ‘சேவை உரிமைச் சட்டம்’ போன்ற அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை எனக் கூறப்பட்டுள்ளது.இருப்பினும், பட்ஜெட்டில் பல முக்கிய குறைபாடுகள் இருப்பதாகவும், குறிப்பாக சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நலனுக்காக தனிப்பட்ட திட்டங்களோ, சிறப்பு நிதி ஒதுக்கீடுகளோ அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என எஸ்டிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, ஆண்டுக்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது, முதியோர் உரிமைத்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்துவது மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி, கடந்த ஆண்டைவிட ரூ.4,007 கோடி குறைக்கப்பட்டு ரூ.44,527 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை பாதிக்கக்கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ஏற்கனவே ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தங்க மோதிரத் திட்டத்திற்காக ரூ.560 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது, அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் தற்போதைய பிரசவ எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் போதுமானதாக இல்லை என்றும் எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவது அல்லது புதிய தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக தெளிவான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும், முந்தைய அரசின் திட்டங்களுக்கு புதிய பெயர்களை வழங்குவதால் மட்டும் மக்களின் தேவைகள் பூர்த்தியாகாது என்றும் அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.வெறும் மூன்று மாத ஆட்சியிலேயே பெரிய சாதனைகள் நிகழ்ந்ததாகக் கூறுவதால் மட்டும் போதாது என்றும், பெயர் மாற்றங்களும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் மட்டுமே மக்களை திருப்திப்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும் என்றும் எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது. சிறுபான்மை சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு