பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவியை விமானத்தில் அழைத்துச்சென்ற ஆசிரியை
அரசுப் பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவியின் கனவை நனவாக்கும் வகையில், அவரை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று ஆசிரியர் ஒருவர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.நாகர்கோவிலில் உள்ள அனந்தநாடார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தாவரவியல் ஆசிரியராக பணியாற்றும் மலர்விழி, கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்பு மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தாம் கற்பித்த தாவரவியல் தொடர்பான உயிரியல் பாடத்தில் 90-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெறும் மாணவரை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.இந்த ஊக்கத்தால் உற்சாகமடைந்து படித்த மாணவி மகிழா, உயிரியல் பாடத்தில் 90 மதிப்பெண்கள் பெற்று அந்த இலக்கை எட்டினார். மேலும், மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 524 மதிப்பெண்கள் பெற்று சிறப்பான தேர்ச்சி பெற்றார். தற்போது அவர் பொறியியல் படிப்பை தொடர உள்ளார்.தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆசிரியை மலர்விழி, மாணவி மகிழாவை நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் ஐதராபாத்துக்கு பயணம் செய்த அவர்கள், பின்னர் மற்றொரு விமானத்தில் சென்னை வந்தடைந்தனர். மாணவியின் நீண்டநாள் ஆசையாக இருந்த விமானப் பயணம் இவ்வாறு நனவானது.
தொடர்ந்து இருவரும் ஏ.சி. ரெயில் பெட்டியில் பயணம் செய்து, 26-ஆம் தேதி நாகர்கோவிலுக்கு திரும்பினர்.இதற்கு முன்பும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய காலத்தில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட நான்கு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்களை விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் சென்ற அனுபவம் மலர்விழிக்கு உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியையின் இந்த செயலை பள்ளி தலைமையாசிரியர் ஐரிஷ் லிண்ட், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.இதற்கிடையில், விமானப் பயண அனுபவத்துக்குப் பிறகு பள்ளியில் நடைபெற்ற காலைநேரக் கூட்டத்தில் பங்கேற்ற மாணவி மகிழா தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அப்போது, தன்னை விமானத்தில் அழைத்துச் செல்லப் போவதாக ஆசிரியை தெரிவித்தபோது மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டதாக கூறினார். இது தனது வாழ்க்கையின் முதல் விமானப் பயணம் என்றும், மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குக் கூட எளிதில் கிடைக்காத வாய்ப்பு தனக்குக் கிடைத்தது என்றும் குறிப்பிட்டார். இந்த மறக்க முடியாத அனுபவத்தை வழங்கிய ஆசிரியை மலர்விழிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.