சிறைத்துறை பணிகளில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தேனி மாவட்டச் சிறையில் கடந்த 26.10.2026 அன்று இரவு அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தப்பியோடிய 17 பேரையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள், கண்காணிப்புப் பணியில் நிலவிய அலட்சியம் மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், தேனி மாவட்டச் சிறையில் 06.08.2024 முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் ந.
Advertisement
நாகேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைதிகள் மற்றும் சிறைப் பணியாளர்களைக் கண்காணிப்பதிலும், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் உரிய கவனம் செலுத்தத் தவறியதாகக் கூறி, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி, 30.10.2026 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்தும் நோக்கில் மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ், சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எந்தவிதமான குறைபாடும் ஏற்படாமல் சிறைத்துறை அதிகாரிகள் தங்களது கடமைகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது இனி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.