நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 37,877 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதில் 871 பேருக்கு ஆளுநர் அர்லேகர் நேரடியாக பட்டங்களை வழங்கினார்.இந்த நிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கிரிமினாலஜி துறையில் மேற்கொண்ட ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற இருந்ததால், அவர் விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், பட்டமளிப்பு விழாவில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொள்ளவில்லை.
Advertisement
இதுகுறித்து டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், காவல்துறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் அலுவலக பணிச்சுமை காரணமாக விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் நெல்லை, கடையம் தொகுதி எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.