நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட முயன்றபோது விஷவாயு தாக்கி 37 பேர் பலி
நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிவர்ஸ் மாகாணத்தின் ஒக்கிரிகா பகுதியில் கச்சா எண்ணெய் திருட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். எண்ணெய் குழாயில் இருந்து வெளியேறிய அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுவை சுவாசித்ததால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நைஜீரியாவின் டெல்டா பகுதிகளில் சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் பல கச்சா எண்ணெய் குழாய்களை அமைத்துள்ளன. ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியில், ஒகாரி ஜெட்டி அருகேயும் முக்கியமான கச்சா எண்ணெய் குழாய் ஒன்று செல்கிறது. எண்ணெய் குழாய்கள் மற்றும் எண்ணெய் கசிவால் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதுடன், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு, வறுமை நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்களும் கிராமவாசிகளும் படகுகள் மூலம் அந்தப் பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு கச்சா எண்ணெயை திருட முயன்றபோது, அதிக அழுத்தத்தில் எண்ணெயுடன் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுவும் வெளியேறியுள்ளது.காற்றில் பரவிய விஷவாயுவை சுவாசித்த பலர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மயங்கி விழுந்துள்ளனர்.