நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிவர்ஸ் மாகாணத்தின் ஒக்கிரிகா பகுதியில் கச்சா எண்ணெய் திருட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். எண்ணெய் குழாயில் இருந்து வெளியேறிய அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுவை சுவாசித்ததால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நைஜீரியாவின் டெல்டா பகுதிகளில் சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் பல கச்சா எண்ணெய் குழாய்களை அமைத்துள்ளன. ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியில், ஒகாரி ஜெட்டி அருகேயும் முக்கியமான கச்சா எண்ணெய் குழாய் ஒன்று செல்கிறது. எண்ணெய் குழாய்கள் மற்றும் எண்ணெய் கசிவால் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதுடன், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு, வறுமை நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்களும் கிராமவாசிகளும் படகுகள் மூலம் அந்தப் பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு கச்சா எண்ணெயை திருட முயன்றபோது, அதிக அழுத்தத்தில் எண்ணெயுடன் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுவும் வெளியேறியுள்ளது.காற்றில் பரவிய விஷவாயுவை சுவாசித்த பலர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மயங்கி விழுந்துள்ளனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அச்சமடைந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, சிலர் அருகில் உள்ள போனி ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் சுற்றுச்சூழல் அமைப்பான “யூத்ஸ் அண்ட் என்விரான்மென்டல் அட்வொகேசி சென்டர்” வெளியிட்ட முதற்கட்ட தகவலின்படி, இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நைஜீரிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.