நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா?
தமிழ்நாடு அரசுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில், எதிர்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் புதிய வளாகம் தேவைப்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.105 ஆண்டுகளைக் கடந்த தமிழக சட்டசபையின் வரலாற்றில், 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி மெட்ராஸ் மாகாணமாக இருந்த காலத்தில் முதன்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செனட் ஹவுஸ் (1937-1938), ராஜாஜி அரங்கம் (1938-1939), கலைவாணர் அரங்கம் (1952-1956), ஊட்டியில் உள்ள அரன்மோர் அரண்மனை (1959-ல் 10 நாட்கள்), ஓமந்தூரார் அரசினர் தோட்டம் (2010-2011) என சில காலகட்டங்களில் சட்டசபை வேறு இடங்களில் செயல்பட்டுள்ளது.எனினும், கடந்த 98 ஆண்டுகளாக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கமே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் இடம்பெறும் புதிய கட்டிட வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.இந்த புதிய வளாகத்துக்கான இடமாக பட்டினப்பாக்கம் போர் ஷோர் எஸ்டேட், கிண்டியில் உள்ள நெருஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், கிண்டி ரேஸ்கோர்ஸ் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள அரசு இடம் உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதிகரிக்கக்கூடிய சட்டமன்ற தொகுதிகள் தமிழ்நாட்டில் தற்போது 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.தமிழகத்தின் மக்கள்தொகை 8 கோடியைத் தாண்டியிருக்கலாம் என மதிப்பிடப்படும் நிலையில், தொகுதி எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், தற்போதுள்ள 234 தொகுதிகள் 354 ஆக உயரக்கூடிய நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தற்போதைய சட்டசபை அரங்கிலேயே 234 உறுப்பினர்களும் இடநெருக்கடியுடன் அமர வேண்டிய சூழல் உள்ளது. மேலும், சபாநாயகர் இருக்கையின் வலதுபுறம் அமைந்துள்ள அரசு அதிகாரிகளுக்கான பகுதியும், இடதுபுறத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கான பகுதியும் போதிய விசாலத்துடன் இல்லை.எதிர்காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்தால், தற்போதைய சட்டசபை அரங்கில் அவர்களுக்கு போதுமான இடவசதி இருக்காது.