தமிழ்நாடு அரசுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில், எதிர்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் புதிய வளாகம் தேவைப்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.105 ஆண்டுகளைக் கடந்த தமிழக சட்டசபையின் வரலாற்றில், 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி மெட்ராஸ் மாகாணமாக இருந்த காலத்தில் முதன்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செனட் ஹவுஸ் (1937-1938), ராஜாஜி அரங்கம் (1938-1939), கலைவாணர் அரங்கம் (1952-1956), ஊட்டியில் உள்ள அரன்மோர் அரண்மனை (1959-ல் 10 நாட்கள்), ஓமந்தூரார் அரசினர் தோட்டம் (2010-2011) என சில காலகட்டங்களில் சட்டசபை வேறு இடங்களில் செயல்பட்டுள்ளது.எனினும், கடந்த 98 ஆண்டுகளாக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கமே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் இடம்பெறும் புதிய கட்டிட வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.இந்த புதிய வளாகத்துக்கான இடமாக பட்டினப்பாக்கம் போர் ஷோர் எஸ்டேட், கிண்டியில் உள்ள நெருஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், கிண்டி ரேஸ்கோர்ஸ் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள அரசு இடம் உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதிகரிக்கக்கூடிய சட்டமன்ற தொகுதிகள் தமிழ்நாட்டில் தற்போது 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.தமிழகத்தின் மக்கள்தொகை 8 கோடியைத் தாண்டியிருக்கலாம் என மதிப்பிடப்படும் நிலையில், தொகுதி எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், தற்போதுள்ள 234 தொகுதிகள் 354 ஆக உயரக்கூடிய நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தற்போதைய சட்டசபை அரங்கிலேயே 234 உறுப்பினர்களும் இடநெருக்கடியுடன் அமர வேண்டிய சூழல் உள்ளது. மேலும், சபாநாயகர் இருக்கையின் வலதுபுறம் அமைந்துள்ள அரசு அதிகாரிகளுக்கான பகுதியும், இடதுபுறத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கான பகுதியும் போதிய விசாலத்துடன் இல்லை.எதிர்காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்தால், தற்போதைய சட்டசபை அரங்கில் அவர்களுக்கு போதுமான இடவசதி இருக்காது. அப்போது புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தின் தேவை தவிர்க்க முடியாததாக மாறும். ஒரே இடத்தில் துறைகளை ஒருங்கிணைக்க முடியுமா? தமிழக அரசின் கீழ் 55 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கான அலுவலகங்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலைக்கு எதிரே அமைந்துள்ள எழிலகம் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இந்த அலுவலகங்களை ஒரே வளாகத்துக்குள் கொண்டு வந்தால், நிர்வாக ரீதியாக வசதியாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது. இதனால், எதிர்காலத் தேவையை கணக்கில் கொண்டு புதிய தலைமைச் செயலகத்தை இப்போதே அமைப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கட்டப்பட்ட தலைமைச் செயலகம் என்ன ஆனது?2006 முதல் 2011-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை அமைத்தது. 2010 முதல் 2011-ம் ஆண்டு வரை சுமார் ஓராண்டு காலம் அந்தக் கட்டிடத்திலேயே சட்டசபை கூட்டங்களும் நடைபெற்றன.2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு, அந்த கட்டிடத்தை பன்னோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையாக மாற்றியது. இதையடுத்து சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டது.இதன் காரணமாக, தற்போது புதிதாக அமைக்கப்பட உள்ள தலைமைச் செயலக கட்டிடமும் எதிர்காலத்தில் அரசியல் காரணங்களுக்காக வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படாமல் இருக்க சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அதே நேரத்தில், கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையை மேலும் மேம்படுத்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களையும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் கிண்டிக்கு மாற்றிவிட்டு, ஓமந்தூராரில் உள்ள தற்போதைய கட்டிடத்தை மீண்டும் தலைமைச் செயலகமாக பயன்படுத்தலாம் என்ற மற்றொரு யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.