நாய்க்கு பயந்து ஓடியபோது 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி மீட்பு
உத்தரபிரதேச மாநிலம் பருக்காபாத் மாவட்டம் காயம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி சவுமியா, பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தெருவில் இருந்த நாய் ஒன்று திடீரென அவரை நோக்கி குரைத்தபடி ஓடி வந்தது.இதனால் அச்சமடைந்த சிறுமி, நாயிடமிருந்து தப்பிக்க அலறியபடி ஓடியுள்ளார். அப்போது வழியில் இருந்த பழைய பாழடைந்த கிணற்றின் சேதமடைந்த மூடி மீது எதிர்பாராதவிதமாக கால் வைத்துள்ளார். மூடி உடைந்ததில், சுமார் 40 முதல் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் சிறுமி தவறி விழுந்தார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கிணற்றுக்குள் நச்சு வாயு அபாயம் இருந்ததால் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் முகக்கவசத்துடன் கயிறு மூலம் உள்ளே இறங்கினர்.சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பிறகு, சிறுமி சவுமியாவை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.நாய்க்கு பயந்து ஓடியபோது கிணற்றில் விழுந்த சிறுமியை, ஆபத்தான சூழலிலும் துணிச்சலுடன் மீட்ட மீட்புக்குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன.