நாமக்கல் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். கரூர் மாவட்டம் பள்ளபட்டியை அடுத்த மொலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (35). இவர் தனது தந்தை செல்வராஜ் (60), தாய் காந்திமதி (55) ஆகியோருடன் பெங்களூருவில் இருந்து கரூரில் உள்ள சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். புதன்கிழமை அதிகாலை சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், மற்றொரு குடும்பத்தினர் திருச்செந்தூருக்கு சென்று விட்டு பெங்களூரு நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்செந்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த அந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரை தாண்டிய கார், எதிர்திசையில் வந்த காருடன் நேருக்கு நேர் மோதியது.
Advertisement
மோதல் மிகவும் கடுமையாக இருந்ததால், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய கார்த்திக்குமார், செல்வராஜ் மற்றும் காந்திமதி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நல்லிபாளையம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்ட போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, மற்றொரு காரில் பயணம் செய்த கிசான்கெளடா (19) உள்ளிட்ட 3 பேர் விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்களையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பள்ளபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.