சென்னை தாம்பரத்தில், தன்னை கடித்த பாம்பை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து, அதன் வகையை மருத்துவர்களிடம் காண்பிப்பதற்காக இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மையூர் சாகீக் (36), இன்று புதன்கிழமை காலை தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரப்பலகையின் கீழ் மறைந்திருந்த சிறிய பாம்பு ஒன்று திடீரென அவரது கையில் கடித்தது. பாம்பு கடித்ததால் பதற்றமடையாமல் செயல்பட்ட மையூர் சாகீக், தன்னை கடித்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் பாதுகாப்பாக அடைத்தார். பின்னர் அந்த பாட்டிலுடன் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவர் கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததைப் பார்த்த சக நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Advertisement
ஆனால், பாம்பு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை மருத்துவர்கள் அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க உதவும் என்பதற்காகவே அதைக் கொண்டு வந்ததாக மையூர் சாகீக் தெரிவித்தார். இதையடுத்து மருத்துவர்கள் பாம்பை பரிசோதித்தனர். அதில், அது விஷத்தன்மை இல்லாத சாதாரண பாம்பு என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இளைஞருக்கு தேவையான முதலுதவி அளிக்கப்பட்டதுடன் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். பாம்புடன் இளைஞர் மருத்துவமனைக்கு வந்ததால், தாம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.