தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா வேட்புமனு தாக்கல்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. 12, 13, 14-ம் தேதிகளில் தொடர் விடுமுறை காரணமாக மனுத்தாக்கல் நடைபெறாத நிலையில், நேற்று மீண்டும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, அந்த தொகுதியில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார். தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனுத்தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே, பனைமரம் ஏறும் தொழிலாளியான சதீஷ்குமார், தனது தொழிலை பிரதிபலிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தது கவனம் பெற்றது.