நகர்ப்புற வளர்ச்சி பெயரில் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் சட்ட மசோதா: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
நகர்ப்புற வளர்ச்சிக்காக வேளாண் நஞ்சை நிலங்களை கையகப்படுத்துவதற்கு நகர ஊரக அமைப்பு இயக்குனருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:செப்டம்பர் 2, 2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் புதிய சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சிப் பணிகளுக்காக வேளாண் நஞ்சை நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரத்தை நகர ஊரக அமைப்பு இயக்குனருக்கு வழங்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த மாற்றத்தின் மூலம், இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு இருந்த அதிகாரம் குறைக்கப்படுகிறது. நகர்ப்புற வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் நிலங்களை அழிக்கும் நடவடிக்கையாக இது அமையும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நஞ்சை நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற சட்டப் பாதுகாப்பு 2017-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. நகர்ப்புற வளர்ச்சிப் பணிகள் தாமதமடைவதாகக் கூறி தற்போது இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மசோதா நகர்ப்புறங்களையொட்டிய கிராமப்புற மக்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் என்றும் விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. புதிய சட்டத்தில் மாவட்ட ஆட்சியர், நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக அமைக்கப்படும் குழுவில் உறுப்பினராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே லட்சக்கணக்கான வீட்டுமனைகள், சிப்காட் மற்றும் சிட்கோ பெருந்திட்டங்களுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.