தமிழக சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தின்போது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.தமிழக சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்டு 6-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்டு 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. ஆகஸ்டு 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் விவாதங்களுக்கு பதிலளித்து பேசினர்.இதையடுத்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 43 துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடைந்துள்ளன.இந்த நிலையில், முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய துறைகளில் ஒன்றான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் முதலில் கேள்வி நேரம் நடைபெறும்.
Advertisement
அது முடிந்த பின்னர் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் தொடங்கும்.இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.காவல் துறை தொடர்பான மானியக் கோரிக்கை என்பதால், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேச உள்ளார்.நாளை (4-ந் தேதி) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சட்டசபை கூட்டம் நடைபெறாது. இதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் விடுமுறை என்பதால் சட்டசபை நிகழ்வுகள் இருக்காது.இதன் பின்னர் 7-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூடும். அன்றைய தினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலளித்து பேச உள்ளார். மேலும், துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார்.