நகர்ப்புற வளர்ச்சிக்காக வேளாண் நஞ்சை நிலங்களை கையகப்படுத்துவதற்கு நகர ஊரக அமைப்பு இயக்குனருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:செப்டம்பர் 2, 2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் புதிய சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சிப் பணிகளுக்காக வேளாண் நஞ்சை நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரத்தை நகர ஊரக அமைப்பு இயக்குனருக்கு வழங்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த மாற்றத்தின் மூலம், இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு இருந்த அதிகாரம் குறைக்கப்படுகிறது. நகர்ப்புற வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் நிலங்களை அழிக்கும் நடவடிக்கையாக இது அமையும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நஞ்சை நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற சட்டப் பாதுகாப்பு 2017-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. நகர்ப்புற வளர்ச்சிப் பணிகள் தாமதமடைவதாகக் கூறி தற்போது இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மசோதா நகர்ப்புறங்களையொட்டிய கிராமப்புற மக்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் என்றும் விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. புதிய சட்டத்தில் மாவட்ட ஆட்சியர், நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக அமைக்கப்படும் குழுவில் உறுப்பினராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே லட்சக்கணக்கான வீட்டுமனைகள், சிப்காட் மற்றும் சிட்கோ பெருந்திட்டங்களுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களும் இருப்பதாகவும், வேளாண்மைக்கு எதிரான சட்டங்கள் மற்றும் திட்டங்களால் விளைநிலங்களின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வேளாண்மையை நம்பியுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.கடந்த 2023-ம் ஆண்டு முந்தைய அரசு கொண்டு வந்த நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் மூலம் நீர்நிலைகள் உள்ளிட்ட நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டதாகக் கூறியுள்ள விவசாயிகள் சங்கம், அதேபோன்ற நடவடிக்கையாக தற்போதைய த.வெ.க. அரசு இந்த சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளதாக விமர்சித்துள்ளது.உள்ளாட்சி அமைப்புகள் என்பது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பாகும். எனவே, உள்ளாட்சி அதிகாரங்களில் தலையிடுவது நல்லாட்சிக்கான எடுத்துக்காட்டாக இருக்காது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.மேலும், பல்வேறு ஜனநாயக உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக காவல்துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் தொடர்ந்து அலைந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நிலுவையில் உள்ள வழக்குகள் ரத்து செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.