தோள்பட்டை காயத்துக்கு அறுவை சிகிச்சை: 2 முதல் 3 மாதங்களில் மீண்டு வருவார் ஜூனியர் என்டிஆர்
'டிராகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது காயமடைந்த நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் 2 முதல் 3 மாதங்களுக்குள் முழுமையாக குணமடைந்து வழக்கமான நிலைக்குத் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர், தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'டிராகன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஜூனியர் என்டிஆரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், அவர் விரைவில் உடல்நலம் பெற்று அடுத்த 2 முதல் 3 மாதங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்காக ஜூனியர் என்டிஆர் நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.