தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் இதுவரை திறக்கப்படாததற்கு நீர்வளத்துறையின் தரப்பில் இருந்து உரிய நடவடிக்கை இல்லாததே காரணம் என கனிம வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் செயல்படும் ஆற்று மணல் குவாரிகள் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கிருந்து மணல் எடுக்கப்பட்டு, யார்டுகள் மூலம் லாரிகளுக்கு வழங்கும் பணிகள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில், மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக 13 இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 30 இடங்களில் மணல் குவாரிகளை மீண்டும் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, அந்த ஆட்சி முடியும் வரையிலும் குவாரிகள் திறக்கப்படவில்லை.
Advertisement
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, முறையான நடைமுறைகளை பின்பற்றி மணல் குவாரிகள் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மணல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்களுக்கும் மேலாகியும் குவாரிகள் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதையடுத்து, மணல் லாரி உரிமையாளர்கள் கனிம வளத்துறை அமைச்சர் பிரபுவை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது, மணல் குவாரிகளை விரைவில் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இருப்பினும், இதுவரை குவாரிகளை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோதும், தெளிவான பதில் எதுவும் அளிக்காமல் மவுனம் காப்பதாகவும், இதனால் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.