தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை மீண்டும் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், முதலில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் பின்னர் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டதாகவும், அங்குள்ள மக்களவை அரங்கில் 850 பேர் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பாஜகவிடம் அந்த அளவிலான உறுப்பினர் பலம் இல்லை. இருப்பினும், தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 16 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறையுடன் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இணைத்து மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் இந்த சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான சூழல் அமையாததால் மசோதா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவடைந்த நிலையில், இதுவரை சட்டப்படி கூட்டம் முடித்து வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியான நிலையில், எதிர்க்கட்சிகளின் பலம் குறைந்துள்ளதாக மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகியிருப்பதும், திரிணாமுல் காங்கிரசில் ஏற்பட்டுள்ள பிளவும் பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிணாமுல் காங்கிரசின் பெரும்பாலான எம்.பி.க்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போதைய சூழலை பயன்படுத்தி மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 11-ம் தேதி நவராத்திரி தொடங்குவதற்கு முன்பாகவே சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி, தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியாக, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுதொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பரிந்துரைகளை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.