தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி சார்பில் ஏரல் காந்தி சிலை அருகே, வண்டிமலச்சி அம்மன் கோவில் தெரு, உமரிக்காடு, ஆலடியூரர் அகரம், கொற்கை, கொற்கை மணலூர், சிறுத்தொண்டநல்லூர், பண்ணைவிளை புதூர் உள்ளிட்ட 9 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை தரிசனம் செய்தனர். இதையடுத்து 9 விநாயகர் சிலைகளும் வாகனங்கள் மூலம் ஏரல் பஸ் நிலையம் அருகே கொண்டு வரப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. ஏரல் மெயின் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் தாமிரபரணி ஆற்றை அடைந்தது. அங்கு வாகனங்களில் இருந்து சிலைகள் இறக்கப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த விநாயகர் ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.