தொகுதி மறுவரையறை ஆலோசனை; எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்
மத்திய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆலோசிக்க முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விவாதிக்க, நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வாயிலாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தக் கூட்டத்துக்கு தமிழக எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக இதில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறும் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கத் தயக்கம் இல்லை என்று கூறியுள்ளார்.அதே நேரத்தில், கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைத் திட்டம் குறித்து விவாதிக்கவும், தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையையும் திமுக முன்வைத்துள்ளது.மேலும், காங்கிரஸுடன் உள்ள அரசியல் கூட்டணியை கருத்தில் கொண்டு மேகேதாட்டு விவகாரத்தில் அரசு அமைதியாக இருந்து, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து மட்டும் கூட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறை தொடர்பாக நடைபெறும் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை மற்றும் மேகேதாட்டு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.