தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் மாவட்ட சிறைச்சாலையில் கடந்த 26-ம் தேதி இரவு சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்றனர். தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில், தப்பியோடிய 17 பேரையும் 40 மணி நேரத்திற்குள் போலீசார் பிடித்து கைது செய்தனர். போலீஸ் விசாரணைக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைப்பு பிடிபட்ட கைதிகள் அனைவரிடமும் க.விலக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் சிறையிலிருந்து தப்பிச் சென்றதற்கான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கைதிகள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை தப்பிச் சென்று மீண்டும் பிடிபட்ட 17 கைதிகளையும் தமிழகத்தின் பல்வேறு சிறைகளுக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன்படி, மதுரையைச் சேர்ந்த லிங்கபிரசாத், பிரவீன்குமார், ராஜ்குமார் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட உள்ளனர். எஞ்சிய 14 பேரும் சேலம், கோவை, கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட உள்ளனர். இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற தேக்கம்பட்டி சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீசாரைப் பணியில் ஈடுபடுத்தவும், கண்காணிப்புக் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தப்பிக்கும் திட்டத்தின் பின்னணி குறித்து அதிர்ச்சித் தகவல்கள் கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தப்பிப்புத் திட்டத்தை மதுரையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், திருப்பதி ஆகியோர் முன்னின்று செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்களது அண்ணன் ஏற்கெனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மற்றொரு அண்ணன் மதுரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறையில் இருந்த மீனாட்சிசுந்தரம், திருப்பதி ஆகிய இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையிலிருந்து தப்புவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இருவரும் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறு குற்றங்களில் கைதாகி சிறையில் இருந்த மேலும் சிலரைத் தங்களுடன் சேர்த்துக்கொண்ட அவர்கள், வெளியே சென்றதும் மதுரையில் ஓரிடத்தில் கொள்ளையடிக்கலாம் என்றும், அங்கு அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியதாகக் கூறப்படுகிறது.