தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் மாவட்ட சிறைச்சாலையில் கடந்த 26-ம் தேதி இரவு சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்றனர். தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில், தப்பியோடிய 17 பேரையும் 40 மணி நேரத்திற்குள் போலீசார் பிடித்து கைது செய்தனர். போலீஸ் விசாரணைக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைப்பு பிடிபட்ட கைதிகள் அனைவரிடமும் க.விலக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் சிறையிலிருந்து தப்பிச் சென்றதற்கான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கைதிகள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை தப்பிச் சென்று மீண்டும் பிடிபட்ட 17 கைதிகளையும் தமிழகத்தின் பல்வேறு சிறைகளுக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன்படி, மதுரையைச் சேர்ந்த லிங்கபிரசாத், பிரவீன்குமார், ராஜ்குமார் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட உள்ளனர். எஞ்சிய 14 பேரும் சேலம், கோவை, கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட உள்ளனர். இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற தேக்கம்பட்டி சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீசாரைப் பணியில் ஈடுபடுத்தவும், கண்காணிப்புக் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தப்பிக்கும் திட்டத்தின் பின்னணி குறித்து அதிர்ச்சித் தகவல்கள் கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தப்பிப்புத் திட்டத்தை மதுரையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், திருப்பதி ஆகியோர் முன்னின்று செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்களது அண்ணன் ஏற்கெனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மற்றொரு அண்ணன் மதுரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறையில் இருந்த மீனாட்சிசுந்தரம், திருப்பதி ஆகிய இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையிலிருந்து தப்புவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இருவரும் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறு குற்றங்களில் கைதாகி சிறையில் இருந்த மேலும் சிலரைத் தங்களுடன் சேர்த்துக்கொண்ட அவர்கள், வெளியே சென்றதும் மதுரையில் ஓரிடத்தில் கொள்ளையடிக்கலாம் என்றும், அங்கு அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு வடமாநிலங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் மற்ற கைதிகளிடம் தெரிவித்துள்ளனர். திட்டத்தின்படி, கடந்த 26-ம் தேதி இரவு சிறைச்சாலையின் பின்புறம் ஒரு காரை வரவழைத்துள்ளனர். அந்த இரவில் சிறைக்குப் பின்னால் கார் நின்றிருந்ததாகவும், அதனை போலீசார் கவனிக்கத் தவறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், திட்டமிட்ட நேரத்தில் கார் வராததால் தப்பிய கைதிகளால் அதில் ஏறிச் செல்ல முடியவில்லை. இதையடுத்து, 17 பேரும் மூன்று குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு திசைகளில் சென்றுள்ளனர். கூடலூர் எல்லை வரை சென்ற இருவர் தப்பிச் சென்றவர்களில் 15 பேர் காலணிகள் இன்றி சென்றதால், மலைப்பகுதியில் நீண்ட தூரம் செல்ல முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். ஆனால், திருப்பதியும் மீனாட்சிசுந்தரமும் காலணிகள் அணிந்திருந்ததால் தொடர்ந்து ஓடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் உதவி கேட்டு, அவருடன் கூடலூர் எல்லை வரை சென்றுள்ளனர். அங்கு ஒருவரிடம் செல்போனை வாங்கி தங்களது குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். அதற்குள் மற்ற 15 கைதிகளும் போலீசாரிடம் சிக்கிய தகவல் இருவருக்கும் தெரியவந்துள்ளது. தாங்கள் பிடிபட்டால் போலீசார் சுட்டுக்கொன்றுவிடுவார்கள் என அஞ்சிய அவர்கள், வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்தில் சரணடைய முயன்றபோது போலீசார் இருவரையும் பிடித்தனர். மேலும், சிறைக் காவலர்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட சமையல் கரண்டியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். தீபாவளிக்காக வெளியேறியதாக கைதிகள் விளக்கம் விசாரணையின்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்தினரைச் சந்திப்பதற்காகச் சிறையிலிருந்து வெளியேறியதாக மீனாட்சிசுந்தரமும் திருப்பதியும் தெரிவித்துள்ளனர். தாங்கள் இருவர் மட்டும் தப்பிச் சென்றால் எளிதில் பிடிபட்டுவிடுவோம் என்று கருதியதால், மற்ற கைதிகளையும் தங்களுடன் அழைத்துச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, மீனாட்சிசுந்தரம் மற்றும் திருப்பதியின் தாயார், தங்களது மகன்களை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றும், சிறையில் பல்வேறு கொடுமைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.