தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆப்பிள் லாரி; சாலையில் சிதறிய பழங்களை பைகளில் அள்ளிச் சென்ற பொதுமக்கள்
தெலுங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து சாலையில் சிதறிய ஆப்பிள் பழங்களை ஏராளமானோர் போட்டிப்போட்டு சேகரித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹபூபாபாத் மாவட்டம் மடேடு கிராமம் அருகே உள்ள வாரங்கல்–கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிள் பழங்களை ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த ஆப்பிள்கள் முழுவதும் சாலையில் சிதறிக் கிடந்தன.இதைக் கண்ட அந்த வழியாகச் சென்ற சில வாகன ஓட்டிகள் முதலில் ஆப்பிள்களை எடுக்கத் தொடங்கினர். இதுகுறித்த தகவல் அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியதும், சில நிமிடங்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
அவர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பெட்டிகளில் ஆப்பிள்களை வேகமாக சேகரித்து எடுத்துச் சென்றனர்.சம்பவத்தை நேரில் கண்டவர்களின் தகவலின்படி, சுமார் 15 நிமிடங்களுக்குள் சாலையில் சிதறியிருந்த அனைத்து ஆப்பிள்களும் முழுமையாக அகற்றப்பட்டன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து வந்த காவல்துறையினர் அங்கு திரண்டிருந்த கூட்டத்தை கலைத்து, போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, கவிழ்ந்த லாரி சாலையில் இருந்து அகற்றப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.