Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

சாலமன் பாப்பையா மறைவு: அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

சாலமன் பாப்பையா மறைவு: அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: புன்னகை தவழும் முகம், அனைவரையும் ஈர்க்கும் தமிழ்ப்பேச்சு, மதுரை மண்ணின் தனித்துவமான மணம் ஆகியவற்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் அன்பைப் பெற்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவரது மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் சொல்ல முடியாத துயரமும் அடைந்தேன். திருக்குறளுக்கு உரை எழுதியவர், புறநானூற்றை புதிய பார்வையில் அணுகியவர், கம்பனின் படைப்புகளை ஆழமாக ஆய்வு செய்தவர் எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கியவர் பாப்பையா. அதேவேளையில், கடினமான கருத்துகளையும் எளிய நடையிலும் நகைச்சுவை கலந்து பேசும் தனித்திறனையும் கொண்டிருந்தார். பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தமிழர்களின் கொண்டாட்டங்கள் பாப்பையாவின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் அளவுக்கு, அவர்களின் வாழ்வோடு நெருக்கமாக இணைந்திருந்தார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராகப் பணியாற்றிய அவர், ‘பட்டிமன்றம்’ என்றாலே நினைவுக்கு வரும் அளவுக்கு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருந்தார்.

Advertisement
மதுரையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராகத் திகழ்ந்த பாப்பையா, தம்மைப் போலவே பல பேச்சாளர்களை உருவாக்கி தமிழுக்கு அளித்தவர். இதனால் அவரது வழியில் வந்த பல பேச்சாளர்களைக் கொண்ட ஒரு தலைமுறையே உருவானது. மறைந்த தலைவர் கலைஞர் மீதும், என் மீதும் பேராசிரியர் பாப்பையா மிகுந்த அன்பு கொண்டிருந்தார். கழகம் ஆட்சியில் இருந்த காலத்திலும், ஆட்சியில் இல்லாத காலத்திலும் அவரது அன்பில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் அன்போடு கரங்களைப் பற்றிக்கொள்ளும் நெருக்கமான உறவு எங்களுக்கு இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்தபோது நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, அவரது இல்லத்தின் வாசலுக்கே வந்து அவர் என்னை வரவேற்றார். அப்போது, சில மாதங்களுக்கு முன்புதான் தனது துணைவியாரை இழந்திருந்த அவரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வந்தேன். ஆனால், அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. தமிழ்த்தாய் தனது அரும்புதல்வர்களில் ஒருவரை இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மதுரை மக்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு