தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: காயல்பட்டினத்தில் 68.8 மி.மீ. பதிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய வறண்ட வானிலை மாறி, மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகம் வரை சுமார் 900 மீட்டர் உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதன்படி, நேற்று அதிகாலை முதலே தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. காலை 9 மணி வரை மிதமான மழை நீடித்த நிலையில், அதன் பிறகு அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. தூத்துக்குடி நகரில் காலையில் லேசான சாரல் மழை பெய்து, பின்னர் வெயில் காணப்பட்டது. கயத்தாறு பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் நிலவி வந்தது. நேற்று காலையிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மாலை 4.20 மணியளவில் குளிர்ந்த காற்று வீசியதைத் தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்து, சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மேலபஜார், கீழ்பஜார் பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.