பட்டாசுக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு!
தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் உருவாகும் கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேகரித்து அகற்றுவதற்காகப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் அறிவுறுத்தலின்படி, தீபாவளியின்போது உருவாகும் பட்டாசுக் கழிவுகளை மற்ற குப்பைகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து, பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டாசுக் கழிவுகளை முறையாகக் கையாள்வதன் அவசியம் குறித்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, மாநகராட்சியின் பேட்டரி வாகனங்கள் மூலமாகவும் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஒலிப்பதிவுகள் ஒலிபரப்பப்படுகின்றன.
பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உருவாகும் பட்டாசுக் கழிவுகளை வீட்டுக் குப்பைகளுடன் சேர்க்காமல் தனியாகச் சேகரித்து வைக்க வேண்டும். பின்னர், தங்களது பகுதிகளுக்கு வரும் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் அவற்றைத் தனியே ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அதிக அளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் குடியிருப்பு வளாகங்களின் (Bulk Waste Generator – BWG) நிர்வாகிகளும் தங்களது வளாகங்களில் சேரும் பட்டாசுக் கழிவுகளை மற்ற கழிவுகளுடன் கலக்காமல் ஒரே இடத்தில் தனியாகச் சேகரித்து மாநகராட்சிப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
30,000 பிரத்யேக பைகள்; 600 பணியாளர்கள் களத்தில்! பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிப்பதற்காக, தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பிரத்யேகப் பைகள் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பட்டாசுக் கழிவுகள் இந்தப் பைகளில் தனியாகச் சேகரிக்கப்படும். இந்தப் பணிக்காக 600 தூய்மைப் பணியாளர்களும் 350 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள் மாநகராட்சி மூலம் உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக அகற்றப்படும். மேலும், தீபாவளிப் பண்டிகை நாட்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, இரவு நேரங்களில் இயந்திரங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணிகள் கூடுதலாக மேற்கொள்ளப்படும்.
பட்டாசு வெடிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மாநகராட்சி பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்: குறைந்த அளவு புகை மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை (Green Crackers) மட்டுமே பயன்படுத்த வேண்டும். தமிழக அரசு அனுமதித்துள்ள காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுக் கழிவுகளை மற்ற வீட்டுக் குப்பைகளுடன் சேர்க்காமல் தனியாகச் சேகரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டால், அது பெரிய விபத்தாக மாறுவதைத் தடுக்க உடனடியாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்க வேண்டும். அதிக சத்தத்தை ஏற்படுத்தும் தொடர் பட்டாசுகளை (Series Crackers) வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீ விபத்து ஏற்படக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளையும் அவற்றின் கழிவுகளையும் ஒன்றாகக் குவித்து தீ வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மின்மாற்றிகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது. எரிந்து கொண்டிருக்கும் பட்டாசுகளை குப்பைத் தொட்டிகளில் போடுவதும் கூடாது.
பொதுமக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவுறுத்தல் தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவதுடன், பட்டாசு வெடிப்பதால் உருவாகும் கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரிக்க வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், பட்டாசுக் கழிவுகளைச் சாலைகள், தெருக்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டாமல், தங்களது பகுதிகளுக்கு வரும் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கும் வகையில் மாநகராட்சி மேற்கொள்ளும் இந்தச் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.