தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய வறண்ட வானிலை மாறி, மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகம் வரை சுமார் 900 மீட்டர் உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதன்படி, நேற்று அதிகாலை முதலே தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. காலை 9 மணி வரை மிதமான மழை நீடித்த நிலையில், அதன் பிறகு அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. தூத்துக்குடி நகரில் காலையில் லேசான சாரல் மழை பெய்து, பின்னர் வெயில் காணப்பட்டது. கயத்தாறு பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் நிலவி வந்தது. நேற்று காலையிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மாலை 4.20 மணியளவில் குளிர்ந்த காற்று வீசியதைத் தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்து, சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மேலபஜார், கீழ்பஜார் பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி மாணவ, மாணவிகள் இதனால் சிரமமடைந்தனர். மேலும், செட்டிக்குறிச்சி, ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, சூரியமினிக்கன், வெள்ளாளன்கோட்டை, சாலைபுதூர், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், ஆத்திகுளம், மானங்காத்தான், தலையால் நடந்தான்குளம், தெற்கு மயிலோடை, வடக்கு மயிலோடை, வாகைத்தாவூர், சீனிவெள்ளாளபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோர ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், கண்மாய்கள் மற்றும் குளங்களிலும் நீர் தேங்கியது. நீண்ட நாட்களாக வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை இதமான சூழலை ஏற்படுத்தியதால் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து விட்டு விட்டு பெய்த மழை காலை 9 மணி வரை நீடித்தது. அதன் பின்னரும் பகல் முழுவதும் சாரல் மழை பெய்தது. இதனால் ஏரல் பிரதான பஜார் மற்றும் தெருக்களில் மழைநீர் ஓடியதுடன், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வெப்பம் குறைந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், உடன்குடி, கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 68.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.