திருவண்ணாமலை கோவிலுக்கு இன்று அமித்ஷா வருகை: 3 அடுக்கு பாதுகாப்புடன் போலீசார் குவிப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ள நிலையில், நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலையில் டிரோன்கள் மற்றும் ரிமோட் கட்டுப்பாட்டு விமானங்களை பறக்கவிட 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமித்ஷா இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மராட்டிய மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்துக்கொள்ளும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணியளவில் அங்கு வந்தடைய உள்ளார்.ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும் காரில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமண ஆசிரமத்திற்கு அமித்ஷா செல்கிறார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.பின்னர் மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் அமித்ஷா, காரில் சாலை வழியாக புதுச்சேரிக்கு செல்கிறார்.அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பாதுகாப்பு மற்றும் ஹெலிபேடு அமைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளன. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மைதானம் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள உண்ணாமலை அம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஹெலிபேடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.நேற்று இரு ஹெலிபேடுகளிலும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் ஹெலிகாப்டரை தரையிறக்கி ஒத்திகை நடத்தப்பட்டது.
இதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் கலெக்டர் வந்தனா கார்க் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பாதுகாப்பு அதிகாரிகள் கிரிவலப்பாதையில் இருந்து ரமண ஆசிரமம் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழித்தடங்களையும், கோவிலில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை வழியையும் நேரில் ஆய்வு செய்தனர். ரமண ஆசிரமம் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு சோதனைகளை மேற்கொண்டனர்.இதனிடையே, அமித்ஷா செல்லும் வழித்தடம், ஹெலிபேடு மற்றும் அவர் செல்லும் முக்கிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள், ரிமோட் கட்டுப்பாட்டு விமானங்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி சாதனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அங்கீகாரமின்றி ஆளில்லா வான்வழி சாதனங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும், மத்திய உள்துறை மந்திரியின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இன்று மற்றும் நாளை இந்தத் தடை அமலில் இருக்கும் என கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.அமித்ஷாவின் திருவண்ணாமலை வருகையையொட்டி முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.