திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு: விமரிசையாக நடைபெற்ற தீர்த்தவாரி... ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய வருடாந்திர பிரம்மோற்சவ விழா, இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை 5-வது நாளில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவின் 6-ம் நாளில் அனுமந்த வாகன சேவை, தங்கத் தேரோட்டம் மற்றும் கஜ வாகன சேவைகள் நடைபெற்றன. 7-ம் நாளில் சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை வாகன சேவைகள் நடைபெற்றன. 8-ம் நாளான நேற்று காலை ரதோற்சவம் எனப்படும் பெரிய தேரோட்டமும், அஸ்வ வாகன சேவையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி இன்று சிறப்பாக நடைபெற்றது. இதற்காக கோவில் தெப்பக்குளமான சுவாமி புஷ்கரணியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர். தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. அதன்பின்னர் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ பூவராக சுவாமி கோவில் முக மண்டபத்தில், வைகானச ஆகம முறைப்படி உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.