திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு: விமரிசையாக நடைபெற்ற தீர்த்தவாரி... ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு: விமரிசையாக நடைபெற்ற தீர்த்தவாரி... ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு: விமரிசையாக நடைபெற்ற தீர்த்தவாரி... ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய வருடாந்திர பிரம்மோற்சவ விழா, இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை 5-வது நாளில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவின் 6-ம் நாளில் அனுமந்த வாகன சேவை, தங்கத் தேரோட்டம் மற்றும் கஜ வாகன சேவைகள் நடைபெற்றன. 7-ம் நாளில் சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை வாகன சேவைகள் நடைபெற்றன. 8-ம் நாளான நேற்று காலை ரதோற்சவம் எனப்படும் பெரிய தேரோட்டமும், அஸ்வ வாகன சேவையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி இன்று சிறப்பாக நடைபெற்றது. இதற்காக கோவில் தெப்பக்குளமான சுவாமி புஷ்கரணியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர். தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. அதன்பின்னர் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ பூவராக சுவாமி கோவில் முக மண்டபத்தில், வைகானச ஆகம முறைப்படி உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, விஷ்வக்சேன ஆராதனை, புண்யாஹவாசனம், முகப் பிரக்ஷாலனம், தூபம், தீபம், நைவேத்தியம் மற்றும் ராஜ உபசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் ஆகம விதிகளின்படி நடத்தப்பட்டன. ஸ்நாபன திருமஞ்சனம் நிறைவடைந்ததும், சுதர்சன சக்கரத்தாழ்வார் புனித நீராடுவதற்காக சுவாமி புஷ்கரணிக்கு எழுந்தருளச் செய்யப்பட்டார். அங்கு சக்கரத்தாழ்வாரை மூன்று முறை திருக்குளத்தில் மூழ்கச் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் ஒரே நேரத்தில் புஷ்கரணியில் புனித நீராடினர். இந்த நிகழ்வில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி, இணை நிர்வாக அதிகாரிகள் டாக்டர் ஏ.சரத் மற்றும் பிரபலா கோபிநாத், தலைமை விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, மாவட்ட எஸ்பி எல்.சுப்பாராயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.