தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் விமர்சனம்
தவெக அரசின் முதல் பட்ஜெட், பொதுமக்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் முதல் பட்ஜெட் தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்தும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டை ஆய்வு செய்தபோது, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அது இல்லை என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.முந்தைய ஆட்சியில் நடைமுறையில் இருந்த பல்வேறு திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வழங்கப்பட்டிருப்பதைத் தவிர, புதிய அணுகுமுறைகள் அல்லது நீண்டகால வளர்ச்சியை நோக்கிய திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டங்களின் பெயரை மாற்றுவது மட்டுமே வளர்ச்சிக்கான அடையாளமாக கருத முடியாது என்பதை அரசு உணர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல், தேர்தல் பிரசாரத்தின் போது தவெக அளித்த முக்கிய வாக்குறுதிகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் தேர்தல் முழக்கங்களாகவே இருந்தனவா என்ற கேள்வி இயல்பாக எழுவதாகவும் கூறப்பட்டுள்ளது.பட்ஜெட் என்பது அரசின் பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்தும் ஆவணம் மட்டுமல்லாமல், மக்களின் எதிர்கால நம்பிக்கையையும் பிரதிபலிக்க வேண்டிய முக்கிய ஆவணம் என்றும், ஆனால் தற்போதைய பட்ஜெட் அந்த நம்பிக்கையை உருவாக்கத் தவறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.