சேலம் மண்டலத்தில், த.வெ.க. கட்சிக் கொடியின் வண்ணங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் 25 புதிய அரசு டவுன் பஸ்கள் தயாராகி, இயக்கத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசு பஸ்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதன் பின்னர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதிலும், பஸ்களின் நிறத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அரசு பஸ்களின் நிறமும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சேலம் பணிமனையில் மொத்தம் 492 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 15 ஆண்டுகளைக் கடந்த பழைய பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்கள் படிப்படியாக இயக்கப்படுகின்றன.
Advertisement
இதன் முதற்கட்டமாக 25 புதிய டவுன் பஸ்கள் த.வெ.க. கொடியின் மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் பூசப்பட்டு, இயக்கத்துக்கு தயாராக ஜான்சன்பேட்டை பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது 25 புதிய டவுன் பஸ்கள் வந்துள்ளதாகவும், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு அவற்றை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதேவேளையில், பஸ்களுக்கு பூசப்பட்டுள்ள வண்ணம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்கள் கூறினர்.