தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி முதல்-அமைச்சருக்கு பெ.சண்முகம் கடிதம்
இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முதல்-அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினரின் போராட்டங்களில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொள்வதைத் தடுக்க பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த உத்தரவு மிகவும் அவசரமானதாகக் கருதப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையும் கேட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை இருப்பதாகவும், குறிப்பாக இடதுசாரி அமைப்புகளை குறிவைத்து செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.அரசின் உயர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும் என்பதால், இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.எந்த அமைப்பாக இருந்தாலும் ஜனநாயக முறையில் போராடுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது என்றும், அந்த உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்குள் காவல்துறை உள்ளிட்ட துறைகள் சென்று நடவடிக்கை எடுப்பதற்கான சூழலை இது உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாகவே தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஜனநாயக அமைப்புகளும் வலியுறுத்தி வருவதாகவும் பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், சுற்றறிக்கையை கல்லூரிகளுக்கு அனுப்பிய இணை இயக்குநரிடம் மட்டும் விளக்கம் கேட்கப்பட்டதாக அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்டிருப்பதாகவும், ஆனால் யாரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தாங்கள் கோரவில்லை என்றும் பெ.சண்முகம் கூறியுள்ளார்.