தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி முதல்-அமைச்சருக்கு பெ.சண்முகம் கடிதம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி முதல்-அமைச்சருக்கு பெ.சண்முகம் கடிதம்

தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி முதல்-அமைச்சருக்கு பெ.சண்முகம் கடிதம்

இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முதல்-அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினரின் போராட்டங்களில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொள்வதைத் தடுக்க பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த உத்தரவு மிகவும் அவசரமானதாகக் கருதப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையும் கேட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை இருப்பதாகவும், குறிப்பாக இடதுசாரி அமைப்புகளை குறிவைத்து செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.அரசின் உயர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும் என்பதால், இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.எந்த அமைப்பாக இருந்தாலும் ஜனநாயக முறையில் போராடுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது என்றும், அந்த உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்குள் காவல்துறை உள்ளிட்ட துறைகள் சென்று நடவடிக்கை எடுப்பதற்கான சூழலை இது உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாகவே தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஜனநாயக அமைப்புகளும் வலியுறுத்தி வருவதாகவும் பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், சுற்றறிக்கையை கல்லூரிகளுக்கு அனுப்பிய இணை இயக்குநரிடம் மட்டும் விளக்கம் கேட்கப்பட்டதாக அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்டிருப்பதாகவும், ஆனால் யாரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தாங்கள் கோரவில்லை என்றும் பெ.சண்முகம் கூறியுள்ளார். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதுவரை அரசு தரப்பில் பொறுப்பான பதில் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் CPI(M), CPI கட்சிகளின் உறுப்பினர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வட்டாட்சியரின் பயிற்சிக்காலம் முடிவடைந்ததால் இடமாற்றம் செய்யப்படுவார் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகவும், பின்னர் அரசு ஊழியர் நடத்தை விதிகளின் 17-A பிரிவின் கீழ் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு விளக்கம் கேட்பது, சம்பவத்தை சிறிய தவறாக மட்டுமே அரசு கருதுவதைப் போல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வட்டாட்சியர் அனுப்பிய கடிதத்திற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும், அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், அரசு பதவியில் இருக்கும் ஒருவர் தனிப்பட்ட நோக்கத்திற்காக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருந்தால், அது கடுமையான குற்றமாகும் என்றும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதற்கு மேல் நடவடிக்கை தேவையில்லை என்ற வகையில் அமைச்சரின் பதிலும், 17-A பிரிவின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதும், தவறு செய்த அதிகாரியை தண்டிப்பதற்கு பதிலாக அவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே, முதல்-அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் உள்ளிட்ட தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.மேலும், தலைமைச் செயலாளர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்து, அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.