தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீரும் வராத வகையில் அணை திட்டம்: சவுமியா அன்புமணி குற்றச்சாட்டு
காவிரி நீர் பிரச்சினை குறித்து பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, கர்நாடக அரசு காவிரி நீரை உரிய காலத்தில் தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவதில்லை என்றும், இதன் விளைவாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது திறந்து விடப்பட்டிருப்பது உபரி நீர் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும், இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளையும் இணைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.கர்நாடக அரசு தமிழ்நாட்டு எல்லையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அணை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீரும் செல்லாத வகையிலேயே அந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.அணை கட்டப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும், அணை கட்ட அனுமதிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதில் மட்டுமே முடிவு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் இடைநிலை முயற்சிகள் தேவையில்லை என்றும் சவுமியா அன்புமணி கூறினார்.