தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் அது நிலவி வருகிறது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இடையில், கலிங்கப்பட்டினம் அருகே இன்று இரவு கரையை கடக்கக்கூடும். இதன் தாக்கத்தால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னல் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மேற்கண்ட வட தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் காரைக்காலிலும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை செப்டம்பர் 23 முதல் 25-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது.