தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் அது நிலவி வருகிறது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இடையில், கலிங்கப்பட்டினம் அருகே இன்று இரவு கரையை கடக்கக்கூடும். இதன் தாக்கத்தால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னல் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மேற்கண்ட வட தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் காரைக்காலிலும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை செப்டம்பர் 23 முதல் 25-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் வெப்பநிலை பெரிய அளவில் மாறாவிட்டாலும், சில இடங்களில் சற்று உயரக்கூடும். இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியே இருக்கும். செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கலாம். நாளை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று செப்டம்பர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. செப்டம்பர் 25 முதல் 27-ம் தேதி வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 24-ம் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். அதன்பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. ஆந்திரா, ஒடிசா மற்றும் வங்கக்கடலின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்த சில நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் ஆழ்கடல் மீனவர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.