தனியார் மயமாகும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்
இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏவுதளத்தில் இருந்து பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.குலசேகரன்பட்டினம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கிருந்து குறைந்த அளவு எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியும். ஆரம்பகட்டமாக சிறிய ரக ராக்கெட்டுகளை இங்கிருந்து ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதள கட்டிடம், ராக்கெட் பராமரிப்பு பணிமனை உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.மேலும், ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி புறப்படும் வகையில் பெரிய அளவிலான ஹெலிபேடும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வனத்துறை சார்பில் 5 அடுக்குகளாக ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.தற்போது குலசேகரன்பட்டினம் இஸ்ரோ மைய வளாகம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
ஏவுதளப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அந்த வழியாக வாகனங்கள் செல்லாத வகையில் மாற்றுப்பாதையில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரம், காரங்காடு ஆகிய பகுதிகளில் புதிய உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் வகையில் அனைத்து பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இஸ்ரோ சார்பில் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ரூ.986 கோடி மதிப்பில் உருவாகும் இந்த ஏவுதளத்தை முழுமையாக நிர்வகிப்பதுடன், ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான செயல்பாடுகளையும் மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.