80-வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்-அமைச்சர் விஜய்
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தமிழக அரசின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் பங்கேற்ற முதல் சுதந்திர தின விழா என்பதால் இந்த நிகழ்வு சிறப்பு கவனம் பெற்றது.இன்று காலை சுமார் 8 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட விஜய், மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்தபோது, சென்னை காவல்துறையின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.காலை 8.35 மணியளவில் கோட்டை முன்பாக அமைக்கப்பட்டிருந்த அணிவகுப்பு மேடையை அவர் வந்தடைந்தார்.
அங்கு தலைமைச் செயலாளர் சாய்குமார் அவரை வரவேற்றார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட விஜய், திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டார்.அதைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்துக்கு சென்ற அவர், காலை 8.45 மணிக்கு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் உரையாற்றி வருகிறார்.