தனிநபர் கடன் விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் - கே.என். நேரு இடையே காரசார வாக்குவாதம்
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்றபோது, தனிநபர் கடன் விவகாரத்தை மையமாகக் கொண்டு நிதி அமைச்சர் மரிய வில்சனும், திமுக முன்னாள் அமைச்சரான கே.என். நேருவும் இடையே கடுமையான கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றது.
விவாதத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. ரகுபதி, "எங்கள் தலைவர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் மூலம் பொதுமக்களின் மனங்களில் வாழ்கிறார். அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ் எங்கள் ஆட்சியில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் பயனடைந்தனர். தற்போது திருமணமாகும் அனைத்து பெண்களுக்கும் 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்க வேண்டுமெனில், ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி செலவாகும். இதற்கும் குறைவாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த இயலாது" என்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "மகளிர் உரிமைத்தொகையில் உங்கள் தலைவர் இருக்கிறார் என்கிறீர்கள்.
ஆனால், ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடன் சுமையை ஏற்படுத்தி சென்றதும் திமுக ஆட்சிதான். அந்தக் கடனிலும் உங்கள் தலைவரை தேட வேண்டாமா? மாநிலத்தின் நிர்வாகக் குளறுபடிகளுக்கும், அதிகரித்த கடன் சுமைக்கும் திமுகவே காரணம்" என்று விமர்சித்தார்.இதையடுத்து பதிலடி அளித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, "எந்த அரசாக இருந்தாலும் நிர்வாகச் செலவுகளுக்காக கடன் பெறுவது வழக்கமான நடைமுறையே. ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி எந்த மாநில அரசும் கடன் பெற முடியாது. மேலும், மாநிலத்தின் கடனை முழுமையாக அடைக்க 50 ஆண்டுகள் ஆனாலும் வாய்ப்பில்லை என்று நிதித்துறை செயலாளரே தெரிவித்திருக்கிறார். எனவே, கடன் வாங்குவது அனைத்து அரசுகளும் பின்பற்றும் நடைமுறையாகும்" என்று விளக்கமளித்தார்.