ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். தங்கப் பதக்கத்தை சீனாவின் சியாவ் ஜியாருய்சியன் வென்றார். இதன் மூலம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
இதில் 1 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் அடங்கும். ஈஷா சிங் வென்ற வெள்ளிப் பதக்கத்தால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது இந்தியா 4 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் 7 தங்கம் உள்பட மொத்தம் 22 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.