தமிழகத்தில் அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். தமிழகத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2013, 2014-ம் ஆண்டுகளில் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி, தற்காலிக அடிப்படையில் மாவட்ட இணை இயக்குநர்கள் மூலம் இவர்கள் நியமிக்கப்பட்டனர். ஐந்து ஆண்டுகள் பணிக்காலம் நிறைவடைந்ததும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி வரும் இவர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு இந்நிலையில், பணி நிரந்தரம், மாதந்தோறும் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மருத்துவப் பணியாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisement
போராட்டத்தைத் தடுக்க, அதன் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளுக்குச் சென்ற போலீசார், அவர்களை வீட்டுக் காவலில் வைத்தனர். சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. சாலையில் அமர்ந்து மறியல்: 200-க்கும் மேற்பட்டோர் கைது போலீசாரின் தடையையும் மீறி, மருத்துவப் பணியாளர்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் அரசு வாகனங்களில் ஏற்றப்பட்டு அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்றனர்.