விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மொத்தம் 750 இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் கீழமாசிவீதி, விளக்குத்தூண், மொட்டை விநாயகர் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து சிலைகள் ஊர்வலமாக மாசி வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றில் கரைக்கப்படும். இதேபோல், மதுரை புறநகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைப்பதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்த மாநகர காவல்துறை, 350 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அந்த இடங்களில் சிலைகள் வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மதுரை மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை புறநகர் பகுதிகளான திருமங்கலம், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தான், செக்கானூரணி, ஊமச்சிகுளம், சிலைமான், கருப்பாயூரணி, ஒத்தக்கடை, சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கோரப்பட்டது. இதன்படி, புறநகர் பகுதிகளில் சுமார் 400 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவ மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உத்தரவின் பேரில், 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் புறநகர் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: விநாயகர் சிலைகள் நிறுவுதல் மற்றும் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவப்படும் விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடத்துக்கு தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், தீத்தடுப்பு உபகரணங்களும் வைத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.