கோவில் திருவிழாவில் மோதல்: 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை; ஒருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.படுநெல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆடித்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இரவில் சாமி வீதிஉலா நடைபெற இருந்தது. இதற்காக கோவில் அருகே சாமியை அலங்கரிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன.அப்போது சாமி அலங்காரம் செய்யும் இடத்தில் இரு தரப்பினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் தள்ளுமுள்ளாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த சிலர், நள்ளிரவில் கஞ்சா மற்றும் மதுபோதையில் படுநெல்லி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் (27), நீலகண்டன் (27) ஆகியோரை மதுபாட்டில்களால் தாக்கியதுடன், கத்தியாலும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பொன்னேரிகரை போலீசார் அங்கு விரைந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக பொன்னேரிகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்த போலீசார், கொலையில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சிலர் காஞ்சிபுரம்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடையவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் நேற்று காலை அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.இந்த நிலையில், இருவரை வெட்டிக்கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தடுக்கி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.