புதிய கார் வாங்கியதை ஏன் சர்ச்சையாக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ள நடிகை மமிதா பைஜு, பிரபலங்கள் சொந்தமாக கார் வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தனது உழைப்பால் புதிய கார் வாங்கியதை விமர்சிப்பது ஏன் என்றும் அவர் எதிர்வினையாற்றியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் இளம் நடிகையாக கவனம் ஈர்த்து வருபவர் மமிதா பைஜு. ‘பிரேமலு’, ‘சூப்பர் சரண்யா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நிவின் பாலியுடன் அவர் இணைந்து நடித்த ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மமிதா நடிக்கும் படங்கள் திரையரங்க வசூலிலும் கவனம் பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’, ‘கர’ உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வசூலை ஈட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
இதன் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்கிறார். இந்நிலையில், அண்மையில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை மமிதா பைஜு வாங்கியுள்ளார். இதையடுத்து, அவரது கார் வாங்கிய விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளானது. பலரும் இதுகுறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த மமிதா பைஜு, புதிய கார் வாங்குவது எந்த வகையில் தவறாகும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “புதிய கார் வாங்கியதில் என்ன குற்றம் இருக்கிறது? இதை ஏன் இவ்வளவு பெரிய விவாதமாக மாற்ற வேண்டும்? பிரபலங்கள் கார் வாங்குவதில் தவறு ஏதும் இல்லையே. கடினமாக உழைத்தால், என்னைவிட அதிக விலை கொண்ட காரைக்கூட நீங்கள் வாங்கலாம்” என்று தெரிவித்துள்ளார். தனது உழைப்பின் மூலம் கார் வாங்கியதைச் சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் என்ன என்ற மமிதா பைஜுவின் கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.